Thursday, October 24, 2019

அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! – தொடர் ... பாகம் - 1.

சி.என்.அண்ணாதுரைவினவு .com : பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை ! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 1.
பார்ப்பனியக் கொடுங்கோன்மையைத் தோலுறிக்கும் அறிஞர் அண்ணாவின் படைப்புகளை வெளியிடும் முயற்சியாக “சந்திரமோகன்” (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) நாடகத்தை வினவு தளத்தில் வெளியிட்டோம். இத்தொடருக்கு தங்களது பெருவாரியான ஆதரவை வாசகர்கள் வழங்கினர். அந்நாடகத் தொடர் முடிவடைந்ததும், பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் ஆயுதக் கிடங்காக வீற்றிருக்கும் “ஆரிய மாயை” எனும் நூலை இன்று முதல் தொடராக வெளியிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமையன்று ஆரிய மாயை தொடர் வெளிவரும். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ! – வினவு

முன்னுரை :
“ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. (படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விசய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.)
சி. என். அண்ணாதுரை
ஆரிய மாயை
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர் தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி! போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய்போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை, இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும் வஞ்சகமும், பிறவுமான கேடு பயக்கும் குணமுடையோரைப்  போற்றுவது மடைமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடையாகுமா? தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியை புண்ணியவானென்றும், பித்தருங் கூறாரே! நீயோ நயவஞ்சகரை – நா இரண்டுடையாரை, நாவார வாழ்த்துகிறாயே போற்றி! போற்றி! என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர் .

அடியேன் அறைவதல்ல ஐயன்மீர் ! நமது இனத்திலே உள்ளனரே… விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங் கொண்ட ‘சற்சூத்திரர்கள்’ – அவர்கள் சதாகாலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் ‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்களை அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர். அடியேனுடைய வேலை ; அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் ‘போற்றி போற்றி’ யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை. அதுபோலவே நான் அவர்களை ஏசவும் இல்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.



அக்ரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள் ‘ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின் மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படுமோசக்காரா என்று பதற்றம் பேசுகிறாய், பலப்பல கூறி ஏசுகிறாய், பாப் மூட்டையைச் சுமக்கிறாய், பாவி நீ ரெளரவாதி நரகத்தில் உழலுவாய், போ’ என்று சபிப்பர். உங்களுக்குக் கூறுகிறேன்; தூற்றலல்ல, நான் தொகுத்திட்ட இப்பா; பன்னெடு நாட்களுக்கு முன்பு படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை எடுத்துக் காட்டிக் கூறுவதுமல்ல! மீண்டுமொரு முறை இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ பாருங்கள், சில ஆங்கிலச் சொற்கள்!
Avarice, Ambition, Cunning, Wily, Doubletongued Service, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue.
இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை அகராதியின் உதவி கொண்டு பாருங்கள். பிறகு, நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா, தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.
தோழர்களே! இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார். ‘ஆபிடியூபா’ எனும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார். 1807-இல்
“Hindu Manners Customs and Ceremonies” என்ற நூல் Abbe J. A. Dubois என்பவரால், 1807-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. அதிலே பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித் திருக்கிறார்! ஆரிய இன இயல்பை , மிகத் தெளிவாகத் தீட்டியிருக்கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான் இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர்தம் நிலை.
ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன். ‘அவர்  தீட்டியுள்ளது தவறானது ; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்று யாரும் கூறிடவும் முடியாது. ஈடில்லாத “இந்து” பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அது மட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் “இந்து” எழுதிற்று.
ஆரியரில் யாரோ ஓர் அயோக்கியனை, என்றோ ஒரு நாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப் பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா, அழகா? என்று கேட்பர் சிலர்! முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது மடமைதான்.
மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும், வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா?
ஆனால், ஆபி  டியூபா, முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்ட பிறகே, ஏட்டில் எழுதினார்.
சரி, ஆபி டியூபா பிரெஞ்சுப் பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார். அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக் கூடாதோ? என்று சாகசச் சித்தர்கள் கேட்பர். ஆபி  டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியவர்கள் H.K. பூன் சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால், அதனை மேற்பார்வை செய்தவரோ, C.V.முனுசாமி ஐயர் எனும் பூசுரரே!
தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்? ஆகவே ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே! அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துக்கள் சிலவற்றினைக் கேளீர்!

”பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!”
இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும், வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி  டியூபா அன்றே கூறினார்.
(தொடரும்)
அண்ணாவின் ஆரிய மாயை

No comments:

Post a Comment