ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள அறிவு இடந்தரவில்லை .. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 9
வினவு,com :
இத்தகைய
ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித்
துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்... . : இந்துக்களுக்குள் எந்தக் காரணத்தாலாவது மனக்கசப்பு
இருந்தால் அதை நமக்குள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு
வகுப்பார் தாங்கள் இந்துக்களே அல்ல என்று முஸ்லீம்களோடு சேர்ந்து
ஒத்துழைப்பதா?” என்று சாஸ்திரியார் கேட்கிறார். இந்துக்களுக்குள் தகராறு என்ற தத்துவம் மறைந்து வெகு நாட்களாகி விட்டன!
“நானும் இந்து தானே, என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்? என்னை ஏன் தாழ்ந்த
ஜாதி என்று கூறுகிறீர்?” என்று கைகூப்பிக் கேட்ட போது, நெஞ்சம்
திறக்கவில்லை! பிறகே நாம் யோசித்தோம். ஒரு சிறு கூட்டம் நம்மை இங்ஙனம்
கொடுமைப்படுத்தக் காரணம் என்ன என்ற உண்மை விளங்கிற்று. இது இனப்போராட்டம்
என்பது தெரிந்தது. அவர்கள் ஆரியர், நாம் திராவிடர்! அதே ஆராய்ச்சியே,
முஸ்லிம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க்கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே
திராவிட இஸ்லாமியக் கூட்டுப்படை கிளம்பிற்று. சாஸ்திரியார் கூறுவது போல்,
திராவிட நாட்டிலிருந்து ஆரியரை ஓட்ட அல்ல ; ஆரியத்தை ஓட்ட! அதற்கு
முஸ்லீம்களுடன் ஒத்துழைப்பதா? என்கிறார் சாஸ்திரியார். ஆம்! அமெரியிடம்
ஒத்துழைக்கிறீர் நீர். அதை மறக்க வேண்டாமென்று சாஸ்திரியாருக்குக்
கூறுகிறோம். ஆங்கிலேயரும் ஆரியரும் ஒரே இனம். இனத்தோடு இனம் சேருகிறது.
திராவிடரும் – இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது!
பெரியார்
இராமசாமி நாயக்கர், பாகிஸ்தானத்துக்குட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய,
ஆரியருடன் வாழக்கூடாது எனக் கோவை மாநாட்டில் உரைத்தார் என்று சாஸ்திரியார்
சோகிக்கிறார். உண்மைதான்! பெரியார் அங்ஙனம்தான் உரைத்தார். இனம் இனத்தோடு
சேரும் என்ற நியதியை எடுத்துரைத்தார்.
”இது நடக்காத காரியம்” என்றுரைக்கிறார் சாஸ்திரியார். நடக்காத
காரியமானால், அதன் பொருட்டு சாஸ்திரியார், சவர்க்கார் ஜவாளி பாட , வரதர்
மிருதங்கம் கொட்டத் தாசர்கள் தாளமிட, ஆரிய நாட்டியமாடியிருப்பாரா?
”பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிடஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச் சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்.
பாகிஸ்தான், திராவிடஸ்தான் கிளர்ச்சி வெறும் கனவு என்பது உண்மையானால், மதுரை மாநாட்டுக்கு அத்தனை பணச்செலவு ஆகியிருக்காது!
கனவு காண்பது யார்? என்பதைக் காலம் காட்டட்டும். அதுவரை சாஸ்திரியார்
அமெரி அளித்த மகா மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருக்கட்டும்!
தங்களை ‘இந்துக்கள்’ அல்ல என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாதார்
மீது பாய வேண்டும் என்று பற்களை நறநறவெனக் கடிக்கிறார். பல அவதாரமெடுத்த
அரசியல் ஆமை டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு! அவர் இப்போது இந்துக்களைப் படை
திரட்டுகிறாராம். ஏன்? முஸ்லீம்களின் ஆதிக்கம் வளரவொட்டாது தடுக்கலாம்;
முஸ்லீம்கள் பாகிஸ்தான் கேட்பதையும் திராவிடர் திராவிடநாடு கேட்பதையும்
தடுக்கலாம் என்று!
டாக்டர் வரதராஜுலு நாயுடு.
அபாரமான யோசனைதான்! வீரமான உறுமல்தான்! ஆனால், இதற்கு டாக்டர்
வரதராஜுலு, மக்களை ஏன் வலையில் சிக்க வைக்க வேண்டும்? பாற்கடல் மீது பள்ளி
கொண்டவர்! பக்தர் துயரைத் தீர்க்க வந்தவர் பத்மநாபா! பரந்தாமா! என்று
ஆரம்பித்து ஒரு மூச்சு அர்ச்சித்து விட்டால் போதாதா? முப்பத்து முக்கோடி
தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர்,
இந்திரன், சந்திரன், பிரமன், வீரபத்திரன், முருகன், விநாயகன், சிவன்,
விஷ்ணு மற்றும் உள்ள இந்துக் கடவுள்கள் தம் குடும்ப சகிதமாகப் புறப்பட்டு
வந்து விடுவார்களே! இதைவிட்டு ஊருக்குக் கூட்டம் ஏன்? அறிக்கைகள் எதற்கு?
வடநாடு தென்நாடு வட்டமிடுவது எதற்கு? என்று கேட்கிறோம்.
அப்படி வட்டமிட்டாலும் காசி விஸ்வநாதர் காலடி தொழுது தொடர்ந்து மற்றத்
‘திவ்ய க்ஷேத்திரங்களை’ தரிசித்து விட்டு இராமேஸ்வரத்தில் மூழ்கி எழுந்து
‘’இராம நாமமே கற்கண்டு! அதுவே எங்கள் வெடிகுண்டு” என்று பஜனை
செய்துவிட்டால், மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் போகுமே!
இந்துமதக் கற்பனைகளில் டாக்டருக்கு ஆர்வம் இருப்பதால்தான், தாமோர் இந்து
என்று மீசை மேல் கைபோட எண்ணுகிறார்! மீசை இல்லை. ஆகவே டாக்டர் மூஞ்சேயிடம்
முறையிடுகிறார். அவர் தமது தாடியை உருவுகிறார்! நாம் திராவிடர்; இந்து
புராணத்தின் ஆபாசத்தை அலசிப் பார்த்துப் பார்த்து, நமக்கு அருவருப்புத்
தட்டிவிட்டது. வெளியுலகில் உள்ள நாகரிக மக்கள் நகைக்கக்கூடிய புராணப்
புளுகுகளை, நம் மத நூல்கள் என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரவில்லை.
ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள, அறிவு இடந்தரவில்லை.
டாக்டர் நாயுடுவுக்கு சர்வமும் இன்று சர்க்கரையாக இருக்கிறது.
ஆப்பிரிக்கா நாட்டிலே ஒருவிதமான மக்கள் இருக்கிறார்கள், அவர்கள்
கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாக போட்டுக்கொண்டு இருப்பார்கள். மாடு
கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டுத் தொழுவார்கள். கூடப் பிறந்தவரைக் கொன்று
சாமிக்குப் படைப்பார்கள், கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு
அந்த இனத்தைச் சேர்ந்தவர் தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும்
உங்களிடமாகட்டும் ஓர் ஆப்பிரிக்க வாசியோ, அல்லது இங்குள்ள வேறு எவரோ
சொன்னால் சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா? விழாதா? நாலுதலைச்
சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்றுதலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி,
ஆறுதலைச்சாமி, ஆனைமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும்
கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும்
தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடு நிசியில் போகும் தெய்வம்
என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால்,
இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே, இந்தச்
செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக்
கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்றாவிக்கு என்ன செய்வது?
இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம்
எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.
No comments:
Post a Comment