

பலமான அஸ்திவாரம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று சாஸ்திரியார் நினைக்கிறார். ஆகவே இந்து என்ற சொல்லுக்கே அவர், “இந்து என்றால், இந்த நாட்டைப் பிறந்த இடமாகவும் புண்ணிய பூமியாகவும் கருதுகின்றவன் என்பது பொருள்” என்று கூறுகிறார்.
இவரது வியாக்கியானத்துக்கு ஆதாரம் என்ன என்பதை அவர் கூறவில்லை .
“இந்து” என்ற பதத்திற்கு இதுவரை ஆராய்ச்சியாளர்களும், சரித்திரம் எழுதினோரும், அகராதிக்காரர்களும் கொடுத்துள்ள பொருள் என்ன என்று கேட்கிறோம்.

இந்து என்றால், சனாதன தர்மானுசாரி! இந்துஸ்தானம் என்பதற்கு பியர்ஸ் என்சைக்ளோபீடியா தந்துள்ள பொருள் : இமயத்துக்கும் விந்தியமலைக்கும் இடையே உள்ள பிரதேசத்தில் ஒரு பகுதி என்பதாகும். இந்து என்பது ஆரியரையும், இந்துஸ்தானம் என்பது ஆரிய வர்த்தனத்தையும் குறிக்கும். இதைச் சாஸ்திரியார் மறுக்க எந்த ஆதாரத்தையும் – அவரது ஆத்திரத்தைத் தவிர – காட்டுவதற்கில்லை.
இந்த இந்துஸ்தானம், இந்து, இந்துமதம் ஆகியவற்றிற்கும், திராவிடநாடு, திராவிடர், திராவிடர் சமயம் ஆகியவற்றுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நிலவளம் முதற்கொண்டு மக்கள் மனவளம் வரை வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் இருப்பினும் கேடொன்றும் நேரிடாது என்றிருக்கலாம்! முரண்பாடுகள் உள்ளன! அவற்றை மறைத்துப் பயனில்லை; மூடி வைத்து ஆகப் போவது ஒன்றுமில்லை. மிக்க தந்திரத்தோடு ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணை கொண்டோ, வெள்ளையரின் துணை கொண்டோ திராவிட மலர்ச்சியைத் தடுக்க முயன்றால், “தாமதம் ஏற்படக் கூடுமே தவிர, ”தடை”யேற்படாது. முடிவு பிரிவினைதான்!

ஆரிய ராஜ்யங்களாகக் காந்தாரம், காம்போஜம், விதேகம் முதலியன இருந்தபோதும், திராவிடம் தனி ஆட்சியாகவே இருந்தது !
இராஜக்கிருகத்தைத் தலைநகராகக் கொண்டு “மகோன்னத” மாக மகதராஜ்யம் நடத்தப்பட்ட போதும், திராவிடம் தனிதான். மகதராஜ்யத்தின் ”மணிகள்’ எனப் பாணினி, பதஞ்சலி முதலிய “ஆரிய சிரேஷ்டர்கள்” ஒளி வீசவும் நாளந்தா, விக்ரமசீலா முதலிய ஆரிய சர்வகலா சாலைகள் ஆரியக் கதிர்களைப் பரப்பியபோதும், ஆரிய ஒளியும் – கதிரும் , விந்தியத்தைத் துளைத்துக் கொண்டு திராவிடத்தினுள்ளே வரமுடியவில்லை, திராவிடம் தலை நிமிர்ந்தே நின்றது.
சாணக்கியத் தந்திரம் இந்து சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட சந்திரகுப்தன் காலத்திலும், திராவிடம் தனியாகவே இருந்தது.
அன்புடன் கூடிய ஆட்சியை நடத்திய அசோகர் காலத்தில் மட்டுமே, திராவிட எல்லைப் பிரதேசத்தின் ஒரு பகுதியை வடநாட்டு வல்லரசு தன்னுள் கொண்டிருந்தது. கடுமையான கலிங்கப் போருக்குப் பிறகு, இந்தப் பகுதி அசோகர் ஆட்சிக்குட்பட்டது. ஆனால் அந்தப் போரில் கலிங்கர் காட்டிய வீரம் அசோகரைத் திணற வைத்ததுடன், விடுதலை வீரர்கள் மடிந்து வீழ்ந்த குழிகள் அவரது குலையை நடுங்க வைத்தது! அதனால் இனிச் சண்டையே வேண்டாம் என்று கூறுமாறும் அன்புடன் ஆளவேண்டும் என்ற போக்கை அவர் கொள்ளும்படியும் செய்வித்தது. திராவிடம் காட்டிய வீரம் அசோகருக்கு அறத்தின் மீது அளவிலாப் பற்றுப் பிறக்கும்படிச் செய்தது.
குஷான் வகுப்பினர் ஏற்படுத்திய இராஜ்யம், விரிந்து பரந்து இருந்தது; ஆனால் விந்தியத்தோடு நின்றது. திராவிடம் தனி நாடே.

மாளவம், கூர்ஜரம், சௌராஸ்டிரம் ஆகிய ராஜ்யங்களை வீழ்த்தியவனும் காளிதாஸர், அமரசிம்மர், தன்வந்திரி ஆகிய ஆரியக் கலைவல்லாருடன் அளவளாவி ஆண்டவனுமான விக்கிரமாதித்தியன் என்ற காரணப் பெயரும், இரண்டாம் சந்திரகுப்தன் என்ற இயற்கைப் பெயரும் பெற்ற மன்னனையும் விந்தியம் மடக்கிவிட்டது. அவன் திராவிடநாடு புகவில்லை !
ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் அது. ‘பொற்காலம்’ என்று புகழ்பெற்ற நேரம், புரோச் காம்பே துறைமுகங்களில் வியாபாரம் செழித்த சமயம். ஆரியபட்டர் தமது ஆற்றலைக் காட்டிய நேரம். ‘இந்து மதம்’ என்றுமடையா ஆதிக்கம் பெற்று புத்த மதத்தை ஒடுக்கிய சமயம். அந்தப் பொற்காலத்திலும் (Golden Age) திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது.
(தொடரும்)

No comments:
Post a Comment